குமாரசாமியின் சி.டி. பற்றி எங்களுக்கு தெரியும்
குமாரசாமியின் சி.டி. பற்றி எங்களுக்கு தெரியும் என்று பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக பா.ஜனதா பொதுச்செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அறிவிக்க முடியுமா?
மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி மற்றும் பிராமணர் வகுப்பு குறித்து குமாரசாமி இழிவா பேசி அவமானப்படுத்தியுள்ளார். குமாரசாமிக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். பிராமண வகுப்பை சேர்ந்த வீரசாவர்க்கர், கோபாலகிருஷ்ண கோகலே, ரானடே, பாலகங்காதர திலக் போன்றவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டனர். விசால எண்ணம் கொண்ட அரசியல்வாதியாக இருந்தால் குமாரசாமி தனது வீட்டை விட்டு வெளியே வந்து யோசிக்க வேண்டும்.
தங்களின் குடும்பத்தை தவிர்த்துவிட்டு முதல்-மந்திரி வேட்பாளரை குமாரசாமியால் அறிவிக்க முடியுமா?. அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, நட்சத்திர ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தார். இதை அவர் மறந்துவிட்டாரா?. இதை மக்கள் மறக்கவில்லை. அவர் சுயநல அரசியல்வாதி. தேவேகவுடா குடும்பத்தில் 9 பேர் அரசியலில் உள்ளனர். அதனால் பஞ்சரத்னா என்ற பெயர் அவரது யாத்திரைக்கு சரியாக இருக்காது. அதனால் நவரத்னா யாத்திரை நடத்தினால் அது பொருத்தமாக இருக்கும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறியது சரியானதே.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கொன்றதாக குமாரசாமி கூறுகிறார். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அமைத்த ஆணையத்தின் அறிக்கையை அவர் படிக்க வேண்டும். அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பு கூறியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தனது வீட்டு வாசலுக்கு வர வேண்டும் என்று நினைத்து குமாரசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும். குமாரசாமி அரிச்சந்திரன் இல்லை. அவரது சி.டி. பற்றியும் எங்களுக்கு தெரியும். எங்களுக்கும், அவரை போல் அரசியல் செய்ய தெரியும்.
இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.