சிவமொக்கா விமான நிலையத்துக்கு குவெம்பு பெயர்; எடியூரப்பா பேட்டி
சிவமொக்கா விமான நிலையத்துக்கு குவெம்பு பெயர் வைக்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா:
விமான விமான நிலையம்
சிவமொக்கா நகரையொட்டிய சோகானே பகுதியில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வருகிற 27-ந்தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விமான நிலையத்ைத திறந்து வைக்க உள்ளார். எடியூரப்பாவின் தீவிர முயற்சியால் சிவமொக்காவில் விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, விமான நிலையத்துக்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவமொக்காவில் நடந்த விழாவில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, எடியூரப்பாவின் முயற்சியால் சிவமொக்காவுக்கு விமான நிலையம் கிடைத்துள்ளது. இதனால் சிவமொக்காவின் விமான நிலையத்துக்கு எடியூரப்பாவின் ெபயர் வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
குவெம்பு பெயர்
இந்த நிலையில், சிவமொக்கா விமான நிலையத்துக்கு எனது பெயரை வைக்க வேண்டாம் என்று எடியூரப்பா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று சிவமொக்காவில் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவமொக்கா விமான நிலையத்துக்கு எனது பெயரை சூட்ட வேண்டாம். அதற்கு பதிலாக ஞானபீட விருது பெற்ற தேசிய கவிஞர் குவெம்புவின் பெயரை வைக்க வேண்டும். இந்த பெயரை வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி அறிவிப்பார். இது எனது விருப்பம் ஆகும். சிவமொக்கா மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது அவரது மகனும், சிவமொக்கா எம்.பி.யுமான ராகவேந்திரா உடன் இருந்தார்.