2 மகன்களை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி கைது


2 மகன்களை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி கைது
x

ராய்ச்சூரில் மனைவி மீதான ஆத்திரத்தில் 2 மகன்களை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ராய்ச்சூர்:-

தொழிலாளி

ராய்ச்சூர் மாவட்டம் ஜக்லேரதொட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் லிங்கண்ணா. கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் சிவராஜ்(வயது 5), ராகவேந்திரா(3) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் லிங்கண்ணாவுக்கு, அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் தனது மனைவிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாகவும் லிங்கண்ணா சந்தேகித்தார்.

இதனால் அவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது மனைவி அவரிடம் கோபித்துக் கொண்டு மகன்களுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கொலை

நேற்று முன்தினம் லிங்கண்ணா தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது மனைவியை சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் குடும்பம் நடத்த வர மறுத்துவிட்டார். இதனால் லிங்கண்ணா தனது மகன்களை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டார். மகன்களுடன் வீட்டில் இருந்த லிங்கண்ணாவுக்கு தனது மனைவி மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த அவர், தனது மகன்கள் இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் லிங்கண்ணாவை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை தேவதுர்கா போலீசில் ஒப்படைத்தனர்.

கைது

அதன்பேரில் தேவதுர்கா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளின் உடல்களை கைப்பற்றினர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தேவதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கண்ணாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story