மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி கைது


மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 14 Dec 2022 2:44 AM IST (Updated: 14 Dec 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர், தனது மனைவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

சிக்கமகளூரு:-

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தகராறு

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே அருகே தொட்டபீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). காபி தோட்ட தொழிலாளி. இவரது மனைவி சுசீலா (வயது 38). இந்த நிலையில் சுரேஷ், அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மேலும் அவர் சரியாக வேலைக்கும் செல்வதில்லை என தெரிகிறது.

இதனால் சுசீலா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். மேலும் சுசீலாவிடம் மது அருந்த பணம் கேட்டும் சுரேஷ் தகராறு செய்து வந்துள்ளார்.

கொலை

இந்த நிலையில் நேற்றுமுன்தினமும் சுசீலாவிடம் மது அருந்த பணம் கொடுக்கும்படி சுரேஷ் கேட்டுள்ளார். அப்போது சுசீலா பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், சுசீலாவின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், மூடிகெரே போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மனைவி சுசீலாவை யாரோ மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்ததாக கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கொலை செய்யப்பட்ட சுசீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் கைது

இந்த நிலையில் சுரேசின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மது அருந்த பணம் கொடுக்க மறுத்ததால், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேசை கைது செய்தனர். இதுகுறித்து மூடிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story