லட்சுமி யானை ஈன்றுள்ள குட்டியானையின் பெயர் 'ஸ்ரீதத்தாத்ரேயா'; மகாராணி பிரமோதாதேவி பெயர் சூட்டினார்
மைசூருவில், லட்சுமி யானை ஈன்றுள்ள குட்டியானைக்கு‘ஸ்ரீதத்தாத்ரேயா’ என்று மகாராணி பிரமோதாதேவி பெயர் சூட்டினார்.
மைசூரு;
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்திருந்த லட்சுமி யானை குட்டி ஈன்றது.
அது ஆண் குட்டி ஆகும். குட்டி ஈன்றதால் லட்சுமி யானை அரண்மனை வளாகத்திலேயே தனியாக வைக்கப்பட்டு உள்ளது. அதனுடன் குட்டி யானையும் இருக்கிறது. தசரா விழாவுக்கு வந்த யானை குட்டி ஈன்றுள்ளதால் மைசூரு மன்னர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த குட்டி யானைக்கு பெயர் சூட்ட மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அந்த குட்டியானைக்கு மைசூரு மகாராணி பிரமோதா தேவி பெயர் சூட்டினார். அவர் குட்டியானைக்கு 'ஸ்ரீதத்தாத்ரேயா' என்று பெயர் சூட்டி இருக்கிறார். பின்னர் தாய் மற்றும் குட்டியானையின் உடல்நிலை குறித்து கால்நடை டாக்டரிடம் விசாரித்தார்.
அப்போது தாய் யானையையும், குட்டி யானையும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கால்நடை டாக்டர் நாகராஜ் தெரிவித்தார். பின்னர் தசரா விழா முடியும் வரை லட்சுமி யானையையும், அதன் குட்டியையும் யானைகள் முகாமுக்கு அனுப்ப வேண்டாம் என்றும், அவற்றுக்கான செலவை தான் பார்த்துக் கொள்வதாகவும் மகாராணி பிரமோதாதேவி தெரிவித்துள்ளார்.