லலிதா மகால் பேலஸ் ஓட்டலை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு?


லலிதா மகால் பேலஸ் ஓட்டலை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு?
x

நூற்றாண்டை நெருங்கும் லலிதா மகால் பேலஸ் ஓட்டலை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மைசூரு

நூற்றாண்டை நெருங்கும் லலிதா மகால் பேலஸ் ஓட்டலை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

லலிதா மகால் பேலஸ்

அரண்மனை நகரம் என்று அழைக்கப்படும் மைசூருவின் அடையாளமாக திகழ்வது, லலிதா மகால் அரண்மனை. அது தற்போது ஓட்டலாக செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் வந்து தங்கியிருந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தற்போது இந்த ஓட்டலாக மாறிய இந்த அரண்மனையை கர்நாடக அரசின் சுற்றுலா மற்றும் வனத்துறை பராமரித்து வருகிறது.

தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

இந்த லலிதா மகால் பேலஸ் கடந்த 1921-ம் ஆண்டு மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையாரால் மைசூரு நகரில் 53 ஏக்கரில் கட்டப்பட்டது. அதன் பின்னர் 1974-ம் ஆண்டு இந்திய சுற்றுலாத்துறை அந்த அரண்மனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த அரண்மனையை தாஜ் ஓட்டல் குழுமம் குத்தகைக்கு எடுத்து ஓட்டலாக மாற்றிவிட்டது. அதாவது 2018-ம் ஆண்டு முதல் அந்த அரண்மனை ஓட்டலாக உருமாறியது. இதன் மூலம் கர்நாடக வன விடுதி மற்றும் ரெசார்ட் துறைக்கு ஆண்டு தோறும் ரூ.1 கோடி வருவாய் ஈட்டி கொடுத்து வருகிறது.

இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த லலிதா மால் பேலஸ் தற்போது நேபாவோடி ஹெரிடேஜ் ஓட்டல் என அழைக்கப்படுகிறது. இந்த கட்டிடம் கட்டி வருகிற அக்டோபர் மாதத்துடன் 100 ஆண்டுகள் ஆகிறது. இதனால் நூற்றாண்டு விழா கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருக்கும் நிலையில், அந்த ஓட்டலை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

இந்த ஓட்டலை அதே தாஜ் குழுமம் குத்தகைக்கு எடுக்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசும், தாஜ் குழுமம் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் தாஜ் குழுமத்திடம் அந்த ஓட்டலை ஒப்படைப்பது தொடர்பாக 14 அல்லது 15-ந்தேதி நடைபெறும் கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் லலிதா மகால் பேலசை தனியாரிடம் தாரைவார்க்க அரசு முடிவு செய்துள்ளதற்கு மைசூரு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் அங்கு பணியாற்றி வரும் 500 ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலையும் உருவாகி உள்ளது. அத்துடன் 53 ஏக்கர் நிலமும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதால், அதன் இயற்கைசூழல் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

எனவே லலிதா மகால் பேலசை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

லலிதா மகால் கட்டிடத்தின் முக்கிய அம்சங்கள்

லலிதா மகால் கட்டிடம், லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரலின் கட்டிடக் கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விப்ரிச்சல் என்பவரால் கட்டப்பட்டது. அரண்மனையின் வெளிப்புறம் வெள்ளை நிறத்தில் அழகுற காட்சி தருகிறது. உட்புறமும் கண்களை கவரும் வகையில் உள்ளது. கோள வடிவ குவிமாடங்களும், நுழைவு மண்டபத்திற்கு மேல் உள்ள மைய குவிமாடமும் லலிதா மகால் அரண்மனையின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. இந்த கட்டிடத்தில் வைசிராய் சூட், டூப்ளக்ஸ் சூட், ஹெரிடேஜ் சூட், டிரெட் ரூம் உள்பட 22 அறைகளும், 32 இணைப்பு அறைகளும் உள்ளன. இந்த கட்டிடத்தை நால்வடி கிருஷ்ணராஜ உடையார் 1921-ம் ஆண்டு ரூ.13 லட்சம் செலவில் கட்டியது நினைவுகூரத்தக்கது.


Next Story