நில முறைகேடு வழக்கு; விசாரணைக்கு தடை கோரிய சித்தராமையாவின் மனு தள்ளுபடி


நில முறைகேடு வழக்கு; விசாரணைக்கு தடை கோரிய சித்தராமையாவின் மனு தள்ளுபடி
x

கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். அந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

கர்நாடக மந்திரிசபை கூட்டம் நடத்தப்பட்டு, சித்தராமையாவுக்கு அனுப்பிய நோட்டீசை கவர்னர் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மந்திரிசபையின் தீா்மானத்தை நிராகரித்த கவர்னர், கடந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் கடந்த 12-ந்தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நாகபிரசன்னா, மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை உகந்தவை என்று குறிப்பிட்டார். இதையடுத்து, தன் மீது விசாரணை நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.



Next Story