பெங்களூருவில் கோர்ட்டு வளாகத்தில் வக்கீலுக்கு கத்திக்குத்து; விசாரணைக்கு ஆஜரான பெண் வெறிச்செயல்
காசோலை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜரான பெண், எதிர்தரப்பு வக்கீலை கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
காசோலை மோசடி
பெங்களூருவை சேர்ந்தவர் காஞ்சனா. இவர் ஹரிஷ் என்பவரிடம் ரூ.5 லட்சத்தை கடனாக பெற்றார். ஆனால் அவர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதற்கிடையே ஹரிஷ் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததால், காஞ்சனா ரூ.5 லட்சத்திற்கான காசோலை ஒன்றை வழங்கினார். ஆனால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லை என கூறி வங்கி அதிகாரிகளால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஹரிஷ் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு பெங்களூரு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக காஞ்சனா கோர்ட்டிற்கு வந்தார். இதையடுத்து நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது ஹரிஷ் தரப்பில் வக்கீல் கிருஷ்ணாரெட்டி ஆஜரானார்.
கத்திக்குத்து
இதையடுத்து அவர் கோர்ட்டு வளாகத்திற்கு வெளியே நடந்து சென்றார். அந்த சமயத்தில் காஞ்சனா, வக்கீலை மறித்தார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணாரெட்டி மீது தாக்குதல் நடத்தினார். இதில் அவரது முகம் உள்பட சில இடங்களில் பலத்த காயமடைந்தது.
இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் இதுதொடர்பாக அல்சூர் கேட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.