எல்.ஐ.சி. முகவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
அத்திபெலேவில் எல்.ஐ.சி முகவர் வீட்டின் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஆனேக்கல்:-
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே டவுன் புவனேஸ்வரி டவுன் பகுதியில் வசித்து வருபவர் தேவராஜேகவுடா. இவர் எல்.ஐ.சி. முகவர் ஆவார். நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், தேவராஜேகவுடாவை சரமாரியாக தாக்கி, கை, கால்களை கட்டியது. பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்தது. இந்த நிலையில் தேவராஜேகவுடாவின் அலறல் சத்தத்தைக்கேட்டு அவரது வீட்டுக்கு ஓடி வந்த பக்கத்தில் கடை வைத்து நடத்தி வரும் மஞ்சுளா என்பவரையும் மர்ம நபர்கள் தாக்கினர். பின்னர் அவரது கடையில் இருந்தும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். மர்ம கும்பல் அப்பகுதிக்கு வந்து செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.