மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை எரித்து கொன்ற தொழிலாளிக்கு பெங்களூரு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பெங்களூரு:
வெல்டிங் தொழிலாளி
பெங்களூரு மல்லத்தஹள்ளியை சேர்ந்தவர் மகேஷ். வெல்டிங் தொழிலாளி. இவருக்கும், பவித்ரா என்ற பெண்ணுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பவித்ரா, அருகில் உள்ள ஓட்டல்களில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே பவித்ராவின் நடத்தையில், மகேசிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும், வீட்டில் இருக்குமாறும் மகேஷ் கூறி உள்ளார். இதனால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மகேஷ், வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது மனைவி மீது ஊற்றி தீ வைத்தார்.
உடல் எரிந்து
இதில் பவித்ராவின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். மேலும் பவித்ராவை அவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சந்திர லே-அவுட் போலீசார் தகவலின் பேரில் வந்தனர். அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை முடித்து தீர்ப்பு கூறினார். அப்போது மனைவியை எரித்து கொன்றது உறுதியானதால், வெல்டிங் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்தார்.