ஊழல் தடுப்பு படை அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவு: கர்நாடகத்தில் மீண்டும் லோக் அயுக்தா- ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், மீண்டும் லோக் அயுக்தாவுக்கு முழுஅதிகாரம் வழங்கி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் மீண்டும் லோக் அயுக்தாவுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், மீண்டும் லோக் அயுக்தாவுக்கு முழுஅதிகாரம் வழங்கி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் மீண்டும் லோக் அயுக்தாவுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
லோக் அயுக்தா முடக்கம்
கர்நாடகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. கர்நாடகத்தில் கனிம சுரங்க முறைகேடு வழக்கை லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா கைது செய்யப்பட்டதால், அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதே நேரத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி, அவர்களுக்கு லோக் அயுக்தா போலீசார் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வந்தனர். லோக் அயுக்தா அரசின் அதிகாரத்தின் கீழ் செயல்படாமல் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் லோக் அயுக்தா அமைப்பின் அதிகாரம் முடக்கப்பட்டது.
பொதுநல மனுக்கள் தாக்கல்
அதாவது 2016-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, லோக் அயுக்தாவுக்கு பதிலாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விதமாக ஊழல் தடுப்பு படையை உருவாக்கினார். ஊழல் தடுப்பு படைக்காக தனியாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., சூப்பிரண்டுகள் முதல் போலீசார் வரை தனியாக நியமிக்கப்பட்டனர். லோக் அயுக்தாவின் அதிகாரம் முற்றிலும் பறிக்கப்பட்டதுடன், கர்நாடகத்தில் பெயரளவுக்கு மட்டுமே அந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக மாநிலத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதையடுத்து, கர்நாடகத்தில் லோக் அயுக்தாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், ஊழல் தடுப்பு படையை கொண்டு வந்த அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தானந்த அர்ஸ், பெங்களூரு வக்கீல்கள் சங்கம் உள்பட 7 அமைப்புகள் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுநல மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
ஊழல் தடுப்பு படை ரத்து
இந்த நிலையில், பொதுநல மனுக்கள் மீதான இறுதி விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் வீரப்பா மற்றும் ஹேமலேகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், லோக் அயுக்தாவின் அதிகாரத்தை முடக்கி ஊழல் தடுப்பு படையை மாநிலத்தில் கொண்டு வந்துள்ள அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வாதிட்டார்கள்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் வீரப்பா மற்றும் ஹேமலேகா, கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
லோக் அயுக்தாவுக்கு அதிகாரம்
மாநிலத்தில் ஊழல் நடைபெறுவதை தடுக்கவும், ஊழலுக்கு எதிராகவும் லோக் அயுக்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒரே நோக்கத்திற்காக 2 அமைப்புகள் மாநிலத்தில் இருப்பது தேவையற்றது. எனவே ஊழல் தடுப்பு படை ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. லோக் அயுக்தா அமைப்புடன் ஊழல் தடுப்பு படையும் இணைக்கப்படுகிறது. லோக் அயுக்தா அமைப்பை இன்னும் பலமாக்க வேண்டும். இதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
மாநிலத்தில் ஏதேனும் ஊழல், பிற முறைகேடுகள் நடைபெற்றதால், அதுபற்றி லோக் அயுக்தா விசாரணை நடத்துவதற்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. ஊழல் தடுப்பு படை போலீசார், உடனடியாக லோக் அயுக்தா போலீசாராக மாற்றப்படுகிறார்கள். ஊழல் தடுப்பு படையில் பதிவான வழக்குகள், தற்போது விசாரணை நடைபெற்று வரும் வழக்குகள் அனைத்தும் லோக் அயுக்தாவுக்கு மாற்றப்படுகிறது. இதன்மூலம் ஊழல் தடுப்பு படையில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது.
நீதிபதிகள் நியமனத்தில்...
கர்நாடக சட்டப்பிரிவுகளின்படி லோக் அயுக்தாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் செயல்பாட்டுக்கு வருகிறது. லோக் அயுக்தா அமைப்பை இன்னும் பலப்படுத்த லோக் அயுக்தா நீதிபதி மற்றும் உப லோக் அயுக்தா நீதிபதியை நியமிக்கும் விவகாரத்தில் சாதி, மதம் பாகுபாடின்றி தகுதியானவரை அரசு நியமிக்க வேண்டும். நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் அரசு எந்தவித பாரபட்சமும் பார்க்க கூடாது.
ஊழல் தடுப்பு படையில் இருந்து லோக் அயுக்தாவுக்கு மாற்றப்படும் போலீஸ் அதிகாரிகள், போலீசார், லோக் அயுக்தாவின் நிர்வாகத்திற்கு கீழ் செயல்பட வேண்டும். லோக் அயுக்தா நீதிபதி, உப லோக் அயுக்தா நீதிபதியின் அனுமதி இல்லாமல், 3 ஆண்டுகளுக்கு முன்பாக, அங்கு பணியாற்றும் போலீசாரை இடமாற்றம் செய்ய இயலாது. லோக் அயுக்தா விசாரணை நடத்தும் வழக்குகளை காலதாமதம் இன்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் நீதிபதி மற்றும் உப லோக் அயுக்தா நீதிபதிகள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளனர்.
6½ ஆண்டுக்கு பின் மாநிலத்தில் மீண்டும் லோக் அயுக்தா
கர்நாடகத்தில் ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கு சிம்ம சொப்பமான இருந்த லோக் அயுக்தா அமைப்பின் அதிகாரம் கடந்த 2016-ம் ஆண்டு முடக்கப்பட்டது. அதாவது கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி ஊழல் தடுப்பு படையை உருவாக்கி முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார்.
இதற்காக தனியாக கூடுதல் டி.ஜி.பி. மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டனர். அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஊழல் தடுப்பு படை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 6½ ஆண்டுக்கு பின்பு மாநிலத்தில் லோக் அயுக்தாவுக்கு மீண்டும் அதிகாரம் கிடைத்துள்ளது. மாநிலத்தில் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.