கே.ஆர்.சர்க்கிள் சுரங்க சாலையில் லோக் அயுக்தா ஐ.ஜி. நேரில் ஆய்வு
தேங்கிய மழைநீரில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்த கே.ஆர்.சர்க்கிள் சுரங்க சாலையில் லோக் அயுக்தா ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெங்களூரு:-
இளம்பெண் சாவு
பெங்களூருவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திடீர் கனமழை பெய்தது. அப்போது சூறை காற்றுடன் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக சுரங்க சாலைகளில் 4 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் கே.ஆர். சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்க சாலையில் கனமழையின்போது குளம்போல் மழைநீர் தேங்கி இருந்தது. அப்போது சுற்றுலா வந்தவர்களின் கார், சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் சிக்கியது.
இதையடுத்து அவர்கள் காரில் இருந்து வெளியேற முயன்றபோது நீரில் தத்தளித்தனர். இதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பானுரேகா என்ற இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாநகராட்சியின் அலட்சியத்தால் தான் இளம்பெண் உயிரிழந்ததாக பலரும் குற்றம்சாட்டினர். மேலும் இதுதொடர்பாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, கார் டிரைவரை கைது செய்தனர்.
ஐ.ஜி. திடீர் ஆய்வு
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக லோக் அயுக்தா போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உள்பட 8 அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் மழைநீர் தேங்கி இளம்பெண் உயிரிழந்த சுரங்க சாலையில் நேற்று லோக்அயுக்தா ஐ.ஜி. சுப்பிரமணியேஷ்வர் ராவ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அப்போது சுரங்க சாலையில் உயரம், அகலம் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுக்கொண்டனர். அப்போது 2 டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, அவற்றை ஒரே நேரத்தில் சுரங்க சாலையில் கொட்டினர்.
பின்னர், தண்ணீர் வடிய ஆகும் நேரத்தை கணக்கீடு செய்தனர். இதையடுத்து விரைவில் பருவமழை நெருங்குவதால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். மேலும் சுரங்க சாலைகளில் தேங்கும் மழைநீர் துரிதமாக ராஜகால்வாயில் கலக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டார்.