வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லோக் அயுக்தா அதிகாரிகள் சோதனை; கணக்கில் வராத பல ஆயிரம் ரூபாய் சிக்கியது
அத்திப்பள்ளியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லோக் அயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆனேக்கல்;
வட்டார போக்குவரத்து அலுவலகம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் நேற்றுமுன்தினம் லோக் அயுக்தா அதிகாரிகள் அத்திப்பள்ளியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாலை 4 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.
லோக் அயுக்தா அதிகாரி ஸ்ரீநாத் ஜோஷி தலைமையில் நடந்த இந்த சோதனையில் 20 அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அத்திப்பள்ளியில் உள்ள சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
கணக்கில் வராத பணம்
மேலும் அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், சோதனைச்சாவடி ஊழியர்கள் ஆகியோரின் செல்போன்கள், மணிப்பர்சுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் 2 இடங்களில் இருந்தும் கணக்கில் வராத பல ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் இருந்து முறைகேடாக பணம் வசூலித்துக் கொண்டிருந்த வட்டார போக்குவரத்து ஊழியர் தர்மா என்பவர் உள்பட ஏராளமானோரை லோக் அயுக்தா அதிகாரிகள் கைது செய்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லோக் அயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.