மாநகராட்சி கமிஷனர் உள்பட 2 பேரிடம் லோக் அயுக்தா விசாரணை
ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் தாவணகெரே மாநகராட்சி கமிஷனர் உள்பட 2 பேரிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர். மந்திரி பைரதி பசவராஜ் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளது.
சிக்கமகளூரு:-
மாநகராட்சி அதிகாரி கைது
தாவணகெேர மாநகராட்சி அதிகாரியாக இருந்தவர் வெங்கடேஷ். இவரிடம் காண்டிராக்டர் கிருஷ்ணப்பா என்பவர் டெண்டர் பணிக்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது, வெங்கடேஷ் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த 6-ந்தேதி கிருஷ்ணப்பா, லோக் அயுக்தா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ரூ.3 லட்சத்தை வெங்கடேஷ் வாங்கியபோது அவரை லோக் அயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி தாவணகெரே மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாத் மற்றும் காண்டிராக்டர் கிருஷ்ணப்பா ஆகியோர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மந்திரி பைரதி பசவராஜ்க்கு ரூ.15 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது என்று பேசி இருந்தனர். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
லோக் அயுக்தா விசாரணை
இந்த ஆடியோ உரையாடலை மந்திரி பைரதி பசவராஜ் மறுத்துள்ளார். நான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சியினர் மந்திரி பைரதி பசவராஜிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், ஆடியோ விவகாரம் குறித்து லோக் அயுக்தா போலீசார் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், விசாரணைக்கு ஆஜராகும்படி மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாத் மற்றும் காண்டிராக்டர் கிருஷ்ணப்பா ஆகியோருக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
அதன்படி நேற்று மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாத் மற்றும் காண்டிராக்டர் கிருஷ்ணப்பா ஆகியோர் லோக் அயுக்தா விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் லோக் அயுக்தா போலீசார் ஆடியோ விவகாரம் மற்றும் லஞ்ச விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். லோக் அயுக்தா போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர்.
மந்திரிக்கும் நோட்டீஸ்?
இந்த நிலையில் ரூ.15 லட்சம் லஞ்சம் விவகாரம் தொடர்பாக தாவணகெரே மாநகராட்சி கமிஷனர் மற்றும் காண்டிராக்டரிடம் லோக் அயுக்தா விசாரணை நடத்தி உள்ளதால், இதுதொடர்பாக விசாரிக்க மந்திரி பைரதி பசவராஜிக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.