பெங்களூரு உள்பட 11 மாவட்டங்களில் 57 இடங்களில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் அயுக்தா சோதனை
பெங்களூரு உள்பட 11 மாவட்டங்களில் 57 இடங்களில் அரசு அதிகாரிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் லோக் அயுக்தா சோதனை மேற்கொண்டது. அப்போது கணக்கில் வராத தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
பெங்களூரு:
சொத்து குவிப்பு
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், லோக் அயுக்தா போலீசார் மாநிலம் முழுவதும் அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடியாக புகுந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ஹாவேரி, பெங்களூரு, பெங்களூரு புறநகர், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், சிவமொக்கா, தட்சிண கன்னடா, உடுப்பி, துமகூரு, கொப்பல் ஆகிய 11 மாவட்டங்களில் 57 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதில் பெங்களூரு பசவேஷ்வராநகரில் உள்ள பெஸ்காம் தொழில்நுட்ப இயக்குனர் வீட்டில் லோக் அயுக்தா அதிகாரிகள் நேற்று காலை முதலே சோதனை நடத்தினர். இதேபோல் விஜயநகரில் உள்ள தொழிலாளர் துறை துணை இயக்குனர் நாராயணப்பாவின் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் கூறினர்.
பண்ணை வீடுகளில்...
இதேபோல் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் கட்டுமான மைய என்ஜினீயர் வகீஷ் ஷெட்டரின் பங்களாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. துமகூருவில் உள்ள அரசு அதிகாரி நரசிம்ம மூர்த்திக்கு சொந்தமான வீடு மற்றும் உறவினர் வீடுகள், கொப்பலில் உள்ள சின்சோலிகரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மைசூருவில் அரசு அதிகாரி மகேஷ் குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
பெங்களூரு பசவேஷ்வராநகரில் உள்ள பெஸ்காம் அதிகாரி ரமேஷ் வீட்டில் நடந்த சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள், விலை உயர்ந்த மதுபாட்டில்கள், பங்கு முதலீட்டு பத்திரங்கள், மோட்டார் சைக்கிள், கார் மற்றும் விலை உயர்ந்த வீட்டு உபயோக பாத்திரங்கள் உள்பட ரூ.1½ கோடி மதிப்பிலானவை சிக்கின.
மான் கொம்பு பறிமுதல்
ஹாவேரியில் உள்ள வகீஸ் ஷெட்டர் வீட்டில் கணக்கில் வராத ரூ.4¾ கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில் மான் கொம்பு ஆகியவையும் இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சிவமொக்காவில் ஷராவதிநகர், சிகாரிப்புரா பகுதிகளில் அரசு முதன்மை என்ஜினீயர் பிரசாந்த் என்பவரின் வீடு மற்றும் பண்ணை வீட்டிலும், கிராம பஞ்சாயத்து என்ஜினீயர் சங்கர் நாயக்கின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத தங்கம், வெள்ளி, சொத்து பத்திரங்கள் உள்பட ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அவற்றை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் மொத்தம் 57 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் உள்பட ஏராளமான பொருட்களை லோக் அயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.