விஷ வாயு தாக்கி குளியல் அறையில் காதல் ஜோடி பலி


விஷ வாயு தாக்கி குளியல் அறையில்  காதல் ஜோடி பலி
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், குளியல் அறையில் விஷ வாயு தாக்கி காதல் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு:-

காதல் ஜோடி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டேலுபேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர். இதேபோல் கோகாக் டவுன் பகுதியை சேர்ந்தவர் சுதாராணி ஆவார். இவர்கள் 2 பேரும் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள நந்தி மலை அருகே ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் காதலித்து வந்தனர்.

இதற்கிடையே அவர்கள் 2 பேரும் காதல் விவகாரம் குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி உள்ளனர். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் திருமண நிச்சயம் செய்து வைத்தார். மேலும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர்.சந்திரசேகர் சிக்கஜாலஹள்ளி அருகே தரபனஹள்ளியில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சுதாராணி கடந்த 10-ந் தேதி சந்திசேகரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார்.

குளியல் அறையில் பிணமாக கிடந்தனர்

அப்போது அவர் வீட்டின் குளியல் அறையில் உள்ள நீர் சூடேற்றும் கருவியை ஆன் செய்தார். பின்னர், அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஒன்றாக குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த கருவியில் திடீரென கோளாறு ஏற்பட, அதில் இருந்து விஷ வாயு கசிய தொடங்கி உள்ளது.

அதை கவனிக்காத 2 பேரும், அந்த காற்றை சுவாசித்ததால், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். மறுநாள் காலையில் வீட்டின் கதவு திறக்கப்படாததால் வீட்டின் உரிமையாளர் சந்தேகம் அடைந்தார். உடனே அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர்கள் 2 பேரும் குளியல் அறையில் பிணமாக கிடந்தனர். இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

விஷ வாயு தாக்கியதில் பலி

மேலும் அவர் உடனடியாக இதுகுறித்து சிக்கஜாலஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் குளித்து கொண்டிருந்தபோது, தண்ணீரை சூடேற்றும் எந்திரத்தில் இருந்து விஷ வாயு கசிந்ததும், இந்த விஷ வாயுவை சுவாசித்த இருவரும் மூச்சுத்திணறி பலியானதும் தெரிந்தது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் சோகம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடி, குளியல் அறையில் விஷ வாயு தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story