வெளிநாட்டினர் மற்றும் புதுமண தம்பதிகளை ஈர்க்கும் அம்சங்களுடன் மருத்துவ நல மையம்: போபால் ஆயுர்வேத கல்லூரி திட்டம்!
மத்திய பிரதேச அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி புதுமண தம்பதிகளை வரவேற்கும் விதமாக புதிய சலுகை மருத்துவ திட்டங்களை அறிவித்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேச அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி புதுமண தம்பதிகளை வரவேற்கும் விதமாக புதிய சலுகை மருத்துவ திட்டங்களை அறிவித்துள்ளது.
வெளிநாட்டினர் உட்பட புதுமண தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளுமாறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக பத்து விதமான திட்டங்களை வரையறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், மூலிகை உணவுகள் உட்பட குழந்தைபேறுக்கு தேவையான பல முறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ நல மையம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மருத்துவ கல்லூரியில் இதற்காக பிரத்யேகமாக 50 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மகப்பேறுக்காக வரும் தம்பதிகள், கர்ப்பிணி பெண்கள் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை தங்கி சிகிச்சை பெறலாம். மகப்பேறு மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு தேவையான, செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத பழக்கங்கள், உணவு முறைகள் என முழுமையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள்.
தம்பதியினருக்கு தேவைப்படும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், உடல் எடை குறைப்பு, வாழ்க்கை முறையில் மாற்றம், முதுகு வலி, மூட்டு வலி போன்ற பல துறைகளில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மருத்துவ நல மையத்தை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடத்துவதற்கு மாநில அரசாங்கத்திடமும் சுற்றுலாத்துறையிடமும் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.