மத்தியபிரதேசத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டியெடுத்த தொழிலாளி


மத்தியபிரதேசத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டியெடுத்த தொழிலாளி
x
தினத்தந்தி 25 Jun 2022 8:27 PM GMT (Updated: 25 Jun 2022 8:39 PM GMT)

மத்தியபிரதேசத்தில் உள்ள வைரச் சுரங்கத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தொழிலாளி தோண்டியெடுத்துள்ளார்.

மத்தியபிரதேசத்தின் பன்னா மாவட்டம், வைர பூமியாக விளங்குகிறது. இங்குள்ள வைரச் சுரங்கங்களில் வைரங்களை தோண்டியெடுத்த சாதாரண மக்கள் பலர் லட்சாதிபதி ஆகியுள்ளனர். அப்படி ஓர் அதிர்ஷ்டம், சுரேந்தர்பால் லோதி என்ற தொழிலாளிக்கு அடித்துள்ளது. கிருஷ்ணா கல்யாண்பூர் என்ற கிராமத்தில் உள்ள வைரச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஒரு வைரத்தை அவர் தோண்டியெடுத்துள்ளார்.

3.15 கேரட் எடையுள்ள இந்த வைரம் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை விலை போகும் என்று கூறப்படுகிறது.

சுரேந்தர்பால் அந்த வைரத்தை அரசு வைர அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார். வழக்கமான முறைப்படி வைரம் ஏலம் விடப்பட்டு, அரசுக்கான கட்டணத்தை கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகை அவருக்கு வழங்கப்படும். புலம்பெயர் தொழிலாளியான சுரேந்தர்பால், வைரம் எடுத்த மற்றவர்களின் கதையைக் கேட்டு தனது அதிர்ஷ்டத்தையும் சோதித்துப் பார்க்க முடிவு செய்துள்ளார்.அதன்படி, 9 மாத கடின உழைப்புக்குப் பிறகு தற்போது அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது.

தனக்கு கிடைத்துள்ள வைரத்தால் தனது பணக்கஷ்டம் தீரும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள தொழிலாளி சுரேந்தர்பால், தன்னுடைய குழந்தைகளையும் இனி நன்றாகப் படிக்க வைக்க முடியும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.


Next Story