மத்தியபிரதேசத்தில் தேசியக்கொடி ஏற்றும்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!
மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு கடையில் கொடியை ஏற்றிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் மூவர்ணக் கொடியை ஏற்றிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சோக சம்பவம் பர்வாஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நர்மதா சாலை பகுதியில் நேற்று மாலை நடந்தது.
நாடு முழுவதும் இல்லந்தோறும் மூவண்ணக்கொடி ஏற்ற பிரதமர் உள்பட பல தலைவர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து பலரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மோகன் படேல் என்ற 45 வயது நபர், நேற்று தன் கடையில் ஒரு இரும்பு கம்பியில் தேசியக் கொடியை ஏற்றியபோது அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த மின் இணைப்பு கம்பியில், இந்த இரும்பு கம்பி தொடர்பு கொண்டது.
அதில் அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரும்பு போன்ற உலோகங்களில் தேசியக்கொடி ஏற்றும் மக்கள் மின் இணைப்பு கம்பிகளில் தொடர்பு இல்லாமல் விழிப்புடன் நடந்து கொள்வது அவசியம்.