நிட்டூர் கிராம பஞ்சாயத்து தலைவராக மகாதேவா தேர்வு
மலவள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட நிட்டூர் கிராம பஞ்சாயத்து தலைவராக மகாதேவா தேர்வாகியுள்ளார்.
ஹலகூர்:
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே உள்ளது நிட்டூர் கிராம பஞ்சாயத்து. இந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மகாதேவா என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து நாகரத்னம்மா என்ற பெண் உறுப்பினர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதில் தேர்தல் அதிகாரியாக அரசு அதிகாரி நஞ்சுண்டேகவுடா செயல்பட்டார். இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாக்களித்தனர். முடிவில் மகாதேவா 7 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரி நஞ்சுண்டேகவுடா அறிவித்தார். அவருக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். நாகரத்னம்மா 6 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிராம பஞ்சாயத்து தலைவரான மகாதேவா, 'இந்த கிராம வளர்ச்சி மற்றும் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவேன். எனக்கு வாக்களித்து, ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.