என் தலையை துண்டித்தாலும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பக்கம் செல்ல மாட்டேன் - சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்


என் தலையை துண்டித்தாலும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பக்கம் செல்ல மாட்டேன் - சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 27 Jun 2022 4:21 PM IST (Updated: 27 Jun 2022 4:27 PM IST)
t-max-icont-min-icon

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பை,

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையில் முகாமிட்டு இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அடுத்த கட்ட நகர்வு மராட்டிய அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பையில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு ராவத் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, "அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்பியிருப்பது எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. நல்ல விஷயம்!

மராட்டியத்தில் மிகப்பெரிய அரசியல் முன்னேற்றங்கள் நடைபெற்று உள்ளன. பாலாசாகேப்பின் சிவசைனிகர்களான நாங்கள், இப்போதைய சூழலில் ஒரு பெரிய போரை நடத்தி கொண்டிருக்கிறோம்.

இது என்னை தடுக்கும் சதி. நீங்கள் என் தலையை துண்டித்தாலும், நான் கவுகாத்தி(அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முகாம்) செல்ல மாட்டேன். என்னை கைது செய்யலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11 ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


Next Story