மகாத்மா காந்தி பூங்கா நுழைவு கட்டணம் உயர்வு; கலெக்டர் அறிவிப்பு


மகாத்மா காந்தி பூங்கா நுழைவு கட்டணம் உயர்வு; கலெக்டர் அறிவிப்பு
x

சிக்கமகளூரு டவுனில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவின் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

சிக்கமகளூரு;

மகாத்மா காந்தி பூங்கா

சிக்கமகளூரு ராமனஹள்ளியில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் கடந்த 2018-ம் ஆண்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அங்கு வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் மகாத்மா காந்தி பூங்காவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நுழைவு கட்டணம்

மகாத்மா காந்தி பூங்காவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு ஜூன் வரை நுழைவு கட்டணம் வாங்கவில்லை. அதற்கு முன்னதாக பெரியவர்களுக்கு ரூ.20-ம், சிறுவர்-சிறுமிகளுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பெரியவர்களுக்கு ரூ.40-ம், சிறியவர்களுக்கு ரூ.20-ம் நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு பூங்கா பராமரிப்பு செலவு, அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் வழங்கியது உள்பட பல்வேறு செலவினங்களால் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. அதை ஈடுகட்டவே இந்த நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை கவரும் வகையில் உள்ள சிறிய ரெயிலின் என்ஜின் அடிக்கடி பழுதாகி வருகிறது. அதனால் புதிய என்ஜின் வாங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. மேலும் பூங்கா ஊழியர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பள உயர்வும் வழங்கப்பட உள்ளது.

வீடியோ கேமரா

சுற்றுலா பயணிகள் வார இறுதி நாட்களில் பூங்காவில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக புகைப்பட கேமராவுக்கு ரூ.500-ம், வீடியோ கேமராவுக்கு ரூ.1,000-மும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் ரமேஷ் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கலெக்டருடன் நகரசபை தலைவர் வேணுகோபால், நகர வளர்ச்சி தலைவர் ஆனந்த் உள்பட பலர் இருந்தனர்.


Next Story