கர்நாடகத்தில் 1.80 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு


கர்நாடகத்தில் 1.80 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு
x

கர்நாடகத்தில் 1.80 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மின் தட்டுப்பாடு

கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் எங்கும் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை. மார்ச் மாதத்தில் தான் அதிக மின் தேவைப்பட்டது. அதாவது 14 ஆயிரத்து 800 மெகாவாட் மின் பயன்படுத்தப்பட்டது. அப்போது கூட மின் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ளப்பட்டது. தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொண்டதால் மின் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

ராய்ச்சூர், பல்லாரி அனல்மின் நிலையங்களில் அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றில் 5 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. மின் நிர்வாகமும் சிறப்பான முறையில் கையாளப்பட்டது. நிலக்கரி பற்றாக்குறையும் ஏற்படவில்லை. மத்திய அரசு தேவையான நிலக்கரி வழங்கியுள்ளது.

மின்மாற்றிகள் பராமரிப்பு

கர்நாடகத்தில் மின் மாற்றிகளை பராமரிக்கும் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் நாளை (இன்று) நிறைவடைகிறது. இதுவரை 1.80 லட்சம் டிரான்ஸ்பார்மர்களை பராமரித்துள்ளோம். நாங்கள் பசுமை மின் உற்பத்திக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம். காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறோம். மின் உற்பத்தி பூங்காக்களை தாவணகெரே, கதக், பாகல்கோட்டை, விஜயாப்புரா, ஹாவேரி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்க முடிவு செய்துள்ளோம்.

சூரியசக்தி மின் உற்பத்தியில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து வரும் நாட்களில் கூறுவேன். மின்துறையில் ஊழியர்கள் பணி இடமாற்றத்தை நிறுத்தியுள்ளேன். தற்போது ஆண்டுக்கு 6 சதவீத ஊழியர்களை பணி இடமாற்றம் செய்ய முதல்-மந்திரி அனுமதி அளித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை பணி இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பகத்சிங் பாடம்

சமூக ஆர்வலர் நாராயணகுரு குறித்த பாடங்களை நீக்கியதாக சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள். அது தவறான தகவல். நாராயணகுரு மற்றும் பகத்சிங்கின் பாடங்களை நீக்கவில்லை. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனரின் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பதில் என்ன தவறு உள்ளது.

இவ்வாறு சுனில்குமார் கூறினார்.


Next Story