குழந்தைகளின் கனவை நனவாக்க வேண்டும்; பெற்றோருக்கு, சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் அறிவுரை


குழந்தைகளின் கனவை நனவாக்க வேண்டும்; பெற்றோருக்கு, சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் அறிவுரை
x

குழந்தைகளின் கனவை நனவாக்க வேண்டும் என்று பெற்றோருக்கு, சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது.இந்த கூட்டத்தை கலெக்டர் ரமேஷ் தொடங்கி வைத்து தலைமை தாங்கி பேசியதாவது:-

குழந்தைகளின் எதிர்கால கனவை நனவாக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும் தயாராக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளை உடனிருந்து பாதுகாத்து நல்ல கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அப்போது தான் ஒவ்வொரு குழந்தைகளும் திறம்பட வளர்வார்கள். குழந்தைகளை, நல்வழியில் அழைத்து செல்வது பெற்றோரின் கடமையாகும். மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புதுறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேசியதாவது:-

குழந்தை திருமணம்

குழந்தைகள், பெண்களுக்கு பாலியல் ரீதியிலான பிரச்சினைகளை போக்சோ சட்டம் மூலம் நிதி பெற்றுக்கொடுக்க போலீஸ்துறை, நீதிமன்றங்கள் தயாராக உள்ளன. குழந்தைகளை, பெற்றோர் நேரடி கண்காணிப்பில் வைத்துகொள்ள வேண்டும்.

இதனால் பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க முடியும். குழந்தைகள், பெண்களுக்கு மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் அந்த திட்டங்களை பெற்று பயனடைவது குழந்தைகள், பெண்களின் கடமை.

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 96 குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதில் 86 திருமணங்கள் தடு்த்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை 26 குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது. குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த போலீஸ்துறை, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.


Next Story