மைசூருவை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்


மைசூருவை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்
x

இந்த ஆண்டு இறுதிக்குள் மைசூருவை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

மைசூரு:-

ஆலோசனை கூட்டம்

மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலெக்டா் ராஜேந்திர பிரசாத் பேசியதாவது:- மைசூரு மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் ஏராளமானோர் உள்ளனர். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க அதிகமானோர் விரும்புகிறார்கள். இதனால் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறையை சரியான முறையில் அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்.

குழந்தை திருமணத்தை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிகமாக குழந்தைகள் திருமணம் நடக்கிறது. இதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாரும் கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது. படிப்பை பாதியில் கைவிட்டவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

குழந்தை தொழிலாளர்கள்...

மாவட்டத்தில் 699 குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த குழந்தைகளை தேடி கண்டுபிடித்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும். 18 வயது குறைவானவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். மைசூருவில் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்க வேண்டும். அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023-ம் ஆண்டு இறுதிக்குள் மைசூருவை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story