மல்லிகார்ஜுன கார்கே வெற்றி இனிப்பு வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம்
மல்லிகார்ஜூன கார்கே வெற்றியை மைசூருவில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
மைசூரு:
அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தோ்தல் கடந்த 17-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டது. இதில் தலைவர் தோ்தலுக்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும், கேரளாவை சேர்ந்த சசிதரூரும் போட்டியிட்டனர். இதில் அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பல்லாரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கன்டெய்னர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தனர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று அந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இவரது வெற்றியை கொண்டாடும் விதமாக மைசூரு மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். கா்நாடக மாநிலத்தின் தலித் பிரிவை சோ்ந்த மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரானது பெருமை அளிப்பதாக கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.