மே.வங்கத்தில் பணிபுரியும் மத்திய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!
2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம் என்று அவர் ஆவேசமாக பேசினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். தனது கட்சியின் மாணவர் பிரிவின் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி பேசியதாவது:-
எங்கள் அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்தால், மாநிலத்தில் பணிபுரியும் மத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம்.என் மீது பாஜக வழக்குப்பதிவு செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். என்னை கைது செய்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று அப்போது தெரியும்.
திரிணாமுல் காங்கிரசில் உள்ளவர்கள் திருடர்கள் போலவும், பாஜகவும் அதன் தலைவர்களும் புனிதமானவர்கள் போலவும் பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
மராட்டிய அரசை கவிழ்க்க பாஜகவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? 2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம்.
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.
மேற்கு வங்க மந்திரியாக இருந்த பார்த்த சாட்டர்ஜிக்கு எதிரான கல்வி ஊழல் வழக்கில் எதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஊடகங்கள், நீதித்துறை மற்றும் அரசியல் கட்சிகளை பாஜக பயமுறுத்துகிறது என்றார்.
முன்னதாக, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா திரிணாமுல் காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது, "மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி சட்டத்தின் ஆட்சியை மீறுகிறது, அதனை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன.திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடும் ஒரே அரசியல் சக்தி பாஜக தான்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு பதிலடி தரும் விதத்தில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். மேலும், குஜராத்தில் பில்கிஸ் பானோ வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொல்கத்தாவில் 48 மணி நேர தர்ணாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.