கட்சி அந்தஸ்து குறித்து அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் பதவி விலகுவேன் - மம்தா பானர்ஜி

கட்சி அந்தஸ்து குறித்து அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் பதவி விலகுவேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்ப பெற்றது. இதற்கிடையே, கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மம்தா பானர்ஜி போனில் பேசியதாக பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
எங்களது கட்சி தொடர்ந்து, அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்றே அழைக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய அந்தஸ்து தொடர்பாக அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன். அதற்கும் தயாராக உள்ளேன். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.