கொல்கத்தா ஆஸ்பத்திரியின் 7-வது மாடியில் இருந்து விழுந்தவர் படுகாயம்
கொல்கத்தா ஆஸ்பத்திரியின் 7-வது மாடியில் இருந்து விழுந்தவர் படுகாயம் அடைந்தார்.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் மத்திய பகுதியில் உள்ள மல்லிக்பஜாரில் ஒரு தனியார் நரம்பியல் ஆஸ்பத்திரி உள்ளது. இதன் 7-வது தளத்தில் உள்ள வார்டில் சுஜித் அதிகாரி என்ற நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று நண்பகல் தனது வார்டில் இருந்து ஜன்னல் வழியாக வெளியேறிய அவர், வெளிப்புறத் திண்டில் அபாயகரமாக அமர்ந்திருந்தார்.அதைப்பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களும், பொதுமக்களும் அவரை உள்ளே செல்லுமாறு சத்தமிட்டனர். அந்த நோயாளியின் உறவினர்களும் கெஞ்சலாக வேண்டுகோள் விடுத்தனர்.தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, வான்வெளி ஏணி மூலம் அவரை நெருங்க முயன்றனர். ஆனால் ஏணியை அருகே கொண்டு வந்தால் தான் குதித்துவிடுவேன் என்ற அந்த நோயாளி மிரட்டியதால் அது அகற்றப்பட்டது.
அவரை காப்பாற்றும் வகையில் கீழே தரையில் வலையை பேரிடர் மீட்புப் படையினர் அமைத்தனர். மேலும் மெத்தை போன்ற மென்மையான பொருட்களும் நேர் கீழே குவிக்கப்பட்டன. இப்படி 2 மணி நேரம் கடந்தது.
இந்நிலையில் பிற்பகல் 1.10 மணிக்கு கீழே இறங்க முயன்ற அந்த நோயாளி, பிடி தவறி தலைகுப்புற கீழே தரையில் வந்து விழுந்தார். அதில் படுகாயம் அடைந்த அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது. அதன் முன்பும் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பான அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.