உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ வின் புதுமையான போராட்டம்


உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ வின் புதுமையான போராட்டம்
x

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அமிதாப் பாஜ்பாய் கார் மீது படகில் பயண போராட்டம் நடத்தினார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் பல சாலைகள் சேதமடைந்து இருக்கின்றன. தற்போது இங்கு விட்டு விட்டு மழை பெய்துவரும் நிலையில் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு தண்ணீரில் மூழ்கிய சுரங்கப் பாதை ஒன்றில் சென்ற ஒரு டெலிவரி ஏஜென்ட் தடுமாறி விழுந்து பலியானார். இந்த நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க நினைத்தார் அமிதாப் பாஜ்பாய். இவர் ஆர்யாநகர் தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ஆவர்.

நேற்று முன்தினம் தனது காரின் மீது ஒரு படகை கயிற்றால் சேர்த்துக்கட்டி, அதில் துடுப்புடன் அமர்ந்து நகர சாலைகளில் பயணம் செய்தார். அத்துடன், நகர மக்கள் தண்ணீர் தேங்கிய இடங்களில் செல்ல படகுகளை பயன்படுத்த வேண்டும். எப்போதும் படகுகளையும், உயிர் காக்கும் உடைகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பேசினார்.

மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்களோ இல்லையோ, கான்பூர் போக்குவரத்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். ஆம், அவர்கள், எம்.எல்.ஏ. அமிதாப் பாஜ்பாய் போக்குவரத்து விதியை மீறியதாக கூறி, அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான 'சலானை' வழங்கினார்கள். எம்.எல்.ஏ.வும் அந்த அபராதத்தைச் செலுத்திவிட்டார்.


Next Story