வேலையை விட்டு நின்ற 16 வயது சிறுமியை கத்தியால் தாக்கி தலைமுடியை பிடித்து சாலையில் தரதரவென இழுத்து சென்ற கடைக்காரர்

மளிகைகடையில் வேலைப்பார்த்து வந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வேலையை விட்டு நின்றுள்ளார்
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் ஹுடியரி பகுதியில் ஓம்கர் திவாரி (வயது 47) என்பவர் மளிகைகடை வைத்துள்ளார். அந்த கடையில் 16 வயது சிறுமி வேலை செய்து வந்தார்.
இதனிடையே, பண விவகாரத்தில் சிறுமிக்கும் கடைக்காரருக்கும் இடையே மோதல் நிலவி வந்துள்ளது. இதனால், சமீபத்தில் அந்த சிறுமி மளிகை கடை வேலையில் இருந்து நின்றுவிட்டார். மேலும், 16 வயது சிறுமியை தன்னுடன் வைத்துக்கொள்ள அனுமதிக்கும்படி சிறுமியின் தாயிடம் ஓம்கர் திவாரி கேட்டுள்ளார். இதற்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓம்கர் திவாரி நேற்று இரவு மதுபோதையில் சிறுமியின் வீட்டிற்கு வந்தார். அங்கு சிறுமியிடம் ஓம்கர் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார். இதற்கு சிறுமியும், சிறுமியின் தாயார் உள்பட குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அப்போது, அவர்களை தாக்கிய ஓம்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சிறுமியை தாக்கியுள்ளார். மேலும், சிறுமியின் தலைமுடியை பிடித்து பரபரப்பான சாலையில் தரதரவென்ற இழுத்து சென்றார். தான் வைத்திருந்த கத்தியால் சிறுமியை தாக்கியுள்ளார். சிறுமி ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை கத்தியால் தாக்கி சாலையில் தரதரவென இழுத்து சென்ற கடைக்காரர் ஓம்கரை கைது செய்தனர்.
கத்தியால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.