இமாசலபிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவால் 22 பேர் சாவு; 6 பேர் மாயம் - காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!


இமாசலபிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவால் 22 பேர் சாவு; 6 பேர் மாயம் - காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!
x

மாண்டி, சம்பா, காங்ரா மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது.

சில மணி நேரத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் கரைபுரண்டது. குறிப்பாக காங்ரா, மாண்டி, ஹமிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன.அத்துடன் சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமானங்களும் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. இதனால் ரெயில் மற்றும் சாலை போக்கு வரத்து முடங்கியுள்ளன. நிலச்சரிவால் பாறைகள் விழுந்து ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

மாண்டி, சம்பா, காங்ரா மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், நிலச்சரிவில் சிக்கியுமாக 22 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் அடங்குவர்.

மாண்டி மாவட்டத்தில் மட்டுமே 13 பேர் உயிரிழந்து 6 பேர் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தேசிய பேரிடர் மீட்புக்குழு (என்.டி.ஆர்.எப்) உதவியுடன் இன்றும் தேடுதல் பணி தொடரும் துணை கமிஷனர் அரிந்தம் சவுத்ரி தெரிவித்தார்.


Next Story