மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக் பெங்களூரு ஆஸ்பத்திரிக்கு மாற்றம்
மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக் பெங்களூரு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கொச்சியில் தங்கியிருந்து வெடிப்பொருட்களை வாங்கியதும் தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
மங்களூரு குண்டுவெடிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் மற்றும் பயங்கரவாதி ஷாரிக் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மங்களூரு பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சிவமொக்காவில் நடந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புகொண்டு தலைமறைவாக இருந்த ஷாரிக், மைசூரு, கேரளா, தமிழ்நாடு என பல பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார். இதற்கிடையே தான், மங்களூருவில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற குக்கர் குண்டை ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்து பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
இந்த நிலையில் ஷாரிக்கின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் தமிழ்நாடு கோவை, நாகர்கோவில், கேரளா மாநிலம் ஆலுவா, கொச்சி ஆகிய பகுதிகளில் தங்கி இருந்து பலரை சந்தித்து பேசி உள்ளார். மேலும் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டு ஏராளமான ஆட்களையும் சேர்த்துள்ளார்.
இதற்காக அவருக்கு டார்க்நெட் இணையதளம் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணஉதவி கிடைத்துள்ளது. மேலும் ஐ.எஸ். பயங்கரவாதியான முகமது மதீன் என்பவரும் டார்க்நெட் மூலம் ஷாரிக்கிற்கு பிட்காயின் அனுப்பி உதவி செய்துள்ளார். அந்த பிட்காயினை அவர், மைசூருவில் பலர் உதவியுடன் மாற்றினார். தனது அடையாளத்தை மறைத்து வேறொரு மதத்தை சேர்ந்தவர் போன்று அவர் சுற்றி வந்துள்ளார்.
கேரளாவில்...
இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மங்களூரு, தமிழ்நாடு, கோவை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷாரிக், கேரளாவில் ஆலுவா, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் 8 இடங்களில் தங்கி இருந்ததும், அங்கு அவருக்கு பண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைத்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் கேரளாவில் ஆலுவா ரெயில் நிலையம், பஸ் நிலையம் அருகே உள்ள விடுதிகளில் தங்கியிருந்தபோது ஷாரிக்கின் பெயருக்கு ஏராளமான கூரியர் மூலம் பார்சல்கள் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கூரியரில் வந்த வெடிப்பொருட்கள்
இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கொச்சியில் உள்ள தங்கும் விடுதியில் 15 நாட்கள் தங்கியிருந்த போது ஷாரிக்கிற்கு வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் கூரியரில் வந்தது தெரியவந்தது. அவர் விடுதியில் இருந்து காலி செய்துவிட்டு சென்ற பிறகும், அங்கு கூரியரில் வெடிப்பொருட்கள் வந்ததாகவும், அது வெடிப்பொருட்கள் என தெரியாமல் அந்த கூரியரை விடுதி உரிமையாளர்கள் ஷாரிக்கிற்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. மேலும் கேரளாவில் தங்கும் விடுதியில் வைத்து வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பாக ஷாரிக் பேசியதும் தெரியவந்தது. மங்களூருவில் குண்டுவெடிப்பை அரங்கேற்ற அந்த வெடிப்பொருட்களை ஷாரிக் வாங்கியதும் தெரியவந்தது.இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவுக்கு சென்று ஷாரிக் தங்கி இருந்த அனைத்து விடுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு அதிகாரிகள் சோதனையும் நடத்தி வருகிறார்கள்.
ெபங்களூருவுக்கு மாற்றம்
மங்களூரு பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக், 80 சதவீதம் குணமடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ஷாரிக்கை பெங்களூருவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்கு டாக்டர்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் பயங்கரவாதி ஷாரிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூருவுக்கு மாற்றி உள்ளனர். நேற்று அதிகாலை ஆம்புலன்ஸ் மூலம் மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்பட்டார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஷாரிக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை முடிவடைந்த பிறகு ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.