மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 11 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!
மணிப்பூர் மாநிலம் காமன்லோக் பகுதியில் நடந்த வன்முறையில் குறைந்தது 11 பேர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், விடுப்பில் சென்ற போலீசார் உடனே பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
இம்பால்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு நடந்த தாக்குதலில் குறைந்தது 11 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. விடுமுறையில் சென்ற போலீசாருக்கு மீண்டும் பணியில் சேர அவசர அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் பெரும்பாலும் வாழும் குக்கி இனக்குழு மக்களுக்கும், தாழ்வான நிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகமான மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே மே 3 அன்று வன்முறை வெடித்தது, பொருளாதார நன்மைகள் மற்றும் மலையக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு குறித்த வெறுப்பால் இந்த வெடித்தது.
மணிப்பூரில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.