மணிப்பூர் வன்முறை: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மணிப்பூர் வன்முறை: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2023 12:19 PM IST (Updated: 3 July 2023 12:56 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். இதை அங்கு பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். இதனால் அவர்களிடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது.

மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில். சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள்னர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கலவரத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகள், சட்ட ஒழுங்கு பிரச்சினை எவ்வாறு இருக்கிறது, கைது நடவடிக்கை, எவ்வளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது, எத்தனை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது, இயல்பு நிலை திரும்ப என்னென்ன நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அடங்கிய ஒரு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ராணுவ பாதுகாப்பு தரக் கோரிய பழங்குடியின மக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் விரிவான அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கின் விசாரணையை நடத்த முடியும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது என்றும் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.


Next Story