லண்டனில் நடைபெற்ற உலகளாவிய கல்வி மன்றத்தில் கவனத்தை ஈர்த்த 'டெல்லி மாடல்'!
டெல்லி மாடல் என்றழைக்கப்படும் டெல்லி அரசுப் பள்ளிகளின் கல்வி மாதிரியை டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா எடுத்துரைத்தார்.
புதுடெல்லி,
டெல்லி அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட சிறந்து விளங்குகின்றன. இதன் காரணமாக இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் என்று டெல்லியின் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பேசினார்.
லண்டனில் நடைபெற்ற 'கல்வி உலக மன்றம்-2022' மாநாட்டில், டெல்லி மாடல் என்றழைக்கப்படும் டெல்லியின் கல்வி மாதிரியை டெல்லியின் துணை முதல்-மந்திரியும் கல்வி மந்திரியுமான மணீஷ் சிசோடியா நேற்று எடுத்துரைத்தார்.
இந்த மாபெரும் கல்வி மன்றத்தில், உலகம் முழுவதும் உள்ள 122 கல்வி மந்திரிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் டெல்லி கல்வி மந்திரி சிசோடியா பேசுகையில்,
"கல்வியின் எதிர்காலம் பற்றி நான் பேசும்போது, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பற்றி மட்டும் சொல்லவில்லை. ஆனால் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளின் எதிர்காலத்தைப் பற்றியும் சேர்த்து பேசுகிறேன்.
இன்றைக்கு கல்வி என்பது படிக்காதவர்களுக்கும், குறைவாக படித்தவர்களுக்கும் கல்வி கற்பிப்பது மட்டுமல்ல, தவறாகப் படிக்கிறவர்களுக்கும் சரியான கல்வி கற்பிப்பதுதான்.
தனியார் பள்ளிகளின் தேர்ச்சியை மிஞ்சி, எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது கிட்டத்தட்ட 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மொத்த மாநில பட்ஜெட்டில் 25 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.அரசுப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த பள்ளிக்கான பார்வையை இலக்குகளை பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம். இவற்றால் 2015ஆம் ஆண்டை விட டெல்லி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட 21 சதவீதம் அதிகரித்துள்ளது."
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன், 'அரசு பள்ளி அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது' என்ற கதையைப் பகிர்ந்து கொள்கிறேன். கல்வியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இங்கு குழுமியிருக்கும் உலகம் முழுவதும் உள்ள 122 கல்வி மந்திரிகள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் விவாதிக்க உள்ளேன்" என்று தனது டுவிட்டரில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதத்தை குறைப்பது குறித்து ஜிம்பாப்வே மந்திரி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிசோடியா, "நாம் கல்விக்கான இடங்களை சுவாரஸ்யமாகவும் கண்ணியமாகவும் மாற்ற வேண்டும். பின்னர் மாணவர்கள் நிச்சயமாக திரும்பி வருவார்கள். தேசங்கள் ஒன்றையொன்று கற்றுக்கொண்டால், நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க முடியும். மாணவர்கள் தங்கள் திறனை உணர்ந்து, உலகம் உண்மையிலேயே பெருமைப்படும் வகையில் பொறுப்புள்ள குடிமக்களாக மாற உதவும் கல்வி முறையை உருவாக்கலாம்" என்றார்.