சத்ரபதி சிவாஜி வளர்ந்த அரண்மனையில் நடனமாடிய பெண் கலைஞர் மீது வழக்குப்பதிவு


சத்ரபதி சிவாஜி வளர்ந்த அரண்மனையில் நடனமாடிய பெண் கலைஞர் மீது வழக்குப்பதிவு
x

சத்ரபதி சிவாஜி வளர்ந்த அரண்மனையான லால் மஹாலில் லாவணி நடனமாடிய பெண் கலைஞர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

லாவணி நடனம்

மராட்டிய மாநிலம் புனேயில் அமைந்துள்ள 'லால் மஹால்' சரித்திரம் வாய்ந்தது. 'ரெட் பேலஸ்' என அழைக்கப்படும் இந்த அரண்மனையில் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி தனது குழந்தை பருவத்தில் சில ஆண்டுகள் வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே மராட்டிய மக்கள் லால் மஹாலை புனித தலமாகவே கருதுகின்றனர்.

இந்த நிலையில் லால் மஹாலில் கடந்த 16-ந் தேதி மராட்டியத்தை சேர்ந்த நடன பெண் கலைஞர் வைஷ்ணவி பாட்டீல் பாரம்பரிய லாவணி நடனமாடி உள்ளார். அவர் நடனமாடும் வீடியோ சமூகவளைத்தளத்தில் வைரலாக பரவியது.

கடும் எதிர்ப்பு

லால் மஹாலில் பெண் கலைஞர் நடனமாடியதற்கு மராட்டிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று லால்மஹால் வெளியே தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டம் நடத்தினர். மராட்டிய அமைப்பான சம்பாஜி பிரிகேட்டின் புனே பிரிவினர் லால் மஹால் வளாகத்தில் பால் தெளித்தனர்.

தேசியவாத காங்கிரஸ் மந்திரி ஜிதேந்திரா அவாத் தனது டுவிட்டர் பக்கத்தில், " சிவாஜி மகாராஜாவின் லால் மஹால் லாவணி நடனம், படப்பிடிப்பு நடத்தும் இடம் அல்ல. இது மீண்டும் நடக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா முன்னாள் எம்.பி.யுமான உதயன் ராஜே போஸ்லே, சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

வழக்குப்பதிவு

இதற்கிடையே வைஷ்ணவி பாட்டீல் நடன நிகழ்ச்சி நடத்திய போது, அங்கு பணியில் இருந்த காவலாளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் நடன குழுவினர் அவரின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர் பாரஸ்கானா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் நடன பெண் கலைஞர் வைஷ்ணவி பாட்டீல் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில் தனது செயலுக்காக பெண் கலைஞர் வைஷ்ணவி பாட்டீல் மன்னிப்பு கோரி உள்ளார்.சத்ரபதி சிவாஜி வளர்ந்த அரண்மனையில் நடனமாடிய பெண் கலைஞர் மீது வழக்குப்பதிவு


Next Story