ராய்ச்சூர் அருகே திருமணமான பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை


ராய்ச்சூர் அருகே திருமணமான பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை
x

ராய்ச்சூர் அருகே திருமணமான பெண்ணை கூட்டாக கற்பழித்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகி விட்ட மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ராய்ச்சூர்:-

பெண் கூட்டாக கற்பழிப்பு

ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் ஒரு பெண் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அந்த பெண் கூலித் தொழிலாளி ஆவார். கிராமத்திற்கு அருகே வேலைக்கு சென்று விட்டு அந்த பெண் நடந்து வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் பேசி சிலர் மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள கால்வாய் அருகே வைத்து அந்த பெண்ணை 4 பேர் சேர்ந்து கூட்டாக கற்பழித்ததாக கூறப்படுகிறது.

அந்த நபர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற பெண்ணை அடித்து, உதைத்து தாக்கியதுடன், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்கள். பின்னர் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். அந்த பெண் படுகாயத்துடன் உயிருக்கு போராடுவதை பார்த்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் சாவு

உடனே குடும்பத்தினர் விரைந்து வந்து பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் இறந்து விட்டார். அவர் இறக்கும் முன்பாக தன்னை கற்பழித்து, தாக்கியவர்கள் பற்றிய தகவல்களையும் தெரிவித்திருந்தார். அதாவது மல்லப்பா குண்டப்பாவும், அவரது கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து தான் தன்னை கற்பழித்ததாகவும், தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் கூறி இருந்தார்.

இதுபற்றி சிந்தனூர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லப்பாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தலைமறைவாகி விட்ட மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் ராய்ச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story