திரை உலகை விட்டு விலகியதற்கு 'மீ டூ' மட்டும் காரணமல்ல- நடிகை ஆஷிதா பேட்டி
திரை உலகை விட்டு விலகியதற்கு ‘மீ டூ’ மட்டும் காரணமல்ல என்று நடிகை ஆஷிதா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆஷிதா. இவர் 'ஆகாஷ், ரோடு ரோமியோ' உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பிரபல யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் திரைப்படங்களில் தற்போது நடிக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆஷிதா, 'நான் திரை உலகை விட்டு விலகியதற்கு மீ டூ' மட்டும் காரணம் இல்லை' என கூறினார். அதுகுறித்து விளக்கமாக கூறும்போது, 'திரைப்படங்களில் நடிப்பதற்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம். நான் படங்களில் நடிக்கும்போது, பலமுறை ஒரே காட்சியை படம் பிடிப்பது, சிறப்பாக நடித்து இருந்தாலும், அதை குறைகூறுவது போன்று பல பிரச்சினைகளை சந்தித்தேன்.
படித்துக் கொண்டிருந்ததால், சில பட வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. ரோடு ரோமியோ படத்திற்குப் பிறகு திரை உலகில் இருந்து விலக தொடங்கி விட்டேன். இப்படி செய்தால் பட வாய்ப்புகள் தருகிறோம், அதிக சம்பளம் தருகிறோம் என்றனர். அதனால் இந்தத் துறையை நான் விரும்பவில்லை. சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது' என்று கூறினார். இந்த பேட்டியின்போது நடிகை ஆஷிதா யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.