காங்கிரஸ் கமிட்டியின் அவசர ஆலோசனை கூட்டம்; பொதுச்செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்பு!


காங்கிரஸ் கமிட்டியின் அவசர ஆலோசனை கூட்டம்; பொதுச்செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்பு!
x

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ள ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ள ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் முதல் வாரத்திலும் எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் பொது செயலாளர்களுடனான கூட்டம் நடந்தது. அதில், கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியது உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதனுடன், புதிய ஜனாதிபதியாக ஆளும் பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்று இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். அடுத்து, துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்டில் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டும், அவை நடவடிக்கைகள் பற்றியும் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 148 நாள் நடைபெறும் 3,800 கி.மீ. தொலைவிலான நாடு தழுவிய காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.


Next Story