பீகாரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை; வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் வெறிச்செயல்


பீகாரில்  பத்திரிகையாளர் சுட்டுக்கொலை; வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் வெறிச்செயல்
x

பீகார் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் பிமல் யாதவ் இன்று காலை அராரியாவில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாட்னா

பீகார் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விமல்குமார் (41). டைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் வேலை செய்து வந்தார். ராணிகஞ்ச் பகுதியில் உள்ள பிரேம் நகரில் விமல்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை பைக்கில் மர்ம நபர்கள் சிலர் வந்து உள்ளனர். அவர்கள் விமல்குமாரை வெளியே அழைத்து உள்ளனர். விமல்குமார் வெளியே வந்ததும் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விமல்குமார் அதே இடத்தில் பலியானார். சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் கூடி உள்ளனர். அவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விமல்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அராரியா சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மர்ம நபர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் விமல் குமாரின் சகோதரர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விமல் குமார் மட்டுமே நேரில் பார்த்த சாட்சி என்பது குறிப்பிட தக்கது. அராரியாவின் ராணிகஞ்ச் பகுதியில் நடந்த இச்சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Next Story