விவசாய பம்பு செட்டுகளுக்கு மீட்டர் பொருத்த உத்தரவிடவில்லை-மந்திரி சுனில்குமார் பேட்டி


விவசாய பம்பு செட்டுகளுக்கு மீட்டர் பொருத்த உத்தரவிடவில்லை-மந்திரி சுனில்குமார் பேட்டி
x

விவசாய பம்புசெட்டுகளுக்கு மீட்டர் பொருத்த உத்தரவிடவில்லை என்றும், 7 மணிநேரம் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: விவசாய பம்புசெட்டுகளுக்கு மீட்டர் பொருத்த உத்தரவிடவில்லை என்றும், 7 மணிநேரம் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார். துமகூருவில் நேற்று மின்சாரத்துறை மந்திரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

7 மணிநேரம் மின்சாரம்

மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, நிலக்கரி விலை உயர்வு காரணமாகும். மின்சாரம் வாங்கும் செலவும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விவசாய பம்பு செட்டுகளுக்கு கண்டிப்பாக மீட்டர் பொருத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதாக தேயைில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அது வெறும் வதந்தி மட்டுமே.

விவசாய பம்பு செட்டுகளில் மீட்டர் பொருத்த வேண்டும் என்று அரசோ, மின்துறையை எந்த உத்தரவும் வெளியிடவில்லை. இதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் 10-க்கும் மேற்பட்ட முறை விளக்கம் அளித்துள்ளேன். அரசுக்கு எதிராக திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்புகிறார்கள். விவசாயிகளுக்கு 7 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுதொடர்ந்து வழங்கப்படும்.

காங்கிரசை இணைக்கும்...

அத்துடன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சோலார் மின் திட்டத்தின் மூலமாக மாநிலத்தில் உள்ள 2½ லட்சம் விவசாயிகளுக்கு சோலார் மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா ஒற்றுமை என்ற பெயரில் பாதயாத்திரையை ராகுல்காந்தி நடத்தி வருகிறார். சுதந்திரம் கிடைத்த சந்தர்ப்பத்தில் நமது நாட்டில் இருந்து பாகிஸ்தான் பிரிய காரணமாக இருந்தது காங்கிரஸ் தான். நமது நாடு சுதந்திரம் அடைந்த பின்பு மாநிலங்களை பிரித்ததும் காங்கிரஸ் தான். தற்போது பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு தான் நாட்டை இணைக்கும் பணியை செய்து வருகிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சி தற்போது பிரிந்து கிடக்கிறது. எனவே ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதற்கு பதிலாக காங்கிரசை இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story