கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே விரைவில் மெட்ரோ சேவை


கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே விரைவில் மெட்ரோ சேவை
x
தினத்தந்தி 23 Feb 2023 8:15 PM IST (Updated: 23 Feb 2023 8:15 PM IST)
t-max-icont-min-icon

3 நாட்கள் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே விரைவில் மெட்ரோ சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு.

புதிய வழித்தடம்

பெங்களூருவில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கையால் சாலைகள் திக்குமுக்காடுகின்றன. இதன் காரணமாக குறைந்த தொலைவை கடந்து செல்ல நீண்ட நேரம் போராட வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மெட்ரோ சேவையை வழங்க அரசு திட்டமிட்டது. அதன்படி கெங்கேரி-பையப்பனஹள்ளி உள்பட 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கூடுதல் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே பையப்பனஹள்ளி வரை இயக்கப்படும் மெட்ரோ சேவையை ஒயிட்பீல்டு வரை நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சேவை வழங்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் நேற்று முதல் 3 நாட்கள் இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் சோதனை ஓட்டம் குறித்து, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்வார்.

வருகிற 15-ந் தேதிக்குள்...

அந்த அறிக்கையில் சிக்னல், வழித்தடம், ரெயில் சேவை, ரெயில் நிலைய பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் இடம்பெறும். இதையடுத்து பாதுகாப்பு கமிஷனரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு வழித்தடத்தில் புதிய மெட்ரோ சேவை தொடங்கப்படும்.அதற்கான தேதியும் அரசு சார்பில் அறிவிக்கப்படும். சோதனை சாதகமாக அமைந்தால், வருகிற 15-ந் தேதிக்குள் மெட்ரோ சேவை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்தவர்கள் பயன் அடைவார்கள்.


Next Story