விதானசவுதாவில் தனக்கு ஒதுக்கிய அறைக்கு வராத மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன்


விதானசவுதாவில் தனக்கு ஒதுக்கிய அறைக்கு வராத மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விதானசவுதாவில் தனக்கு ஒதுக்கிய அறைக்கு கனிமவளத்துறை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் வராமல் உள்ளார். 4 மாதங்களாக அங்கு புதுப்பிக்கும் பணி நடைபெறுவதாகவும், இதனால் அவர் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

விதானசவுதா:-

டி.கே.சிவக்குமாருக்கு 4 அறைகள்

கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து 4 மாதங்கள் ஆகிறது. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ளது. முதல்-மந்திரியுடன் மொத்தம் 34 மந்திரிகள் உள்ளனர். அவர்களுக்கு பெங்களூரு விதானசவுதாவில் (சட்டசபை கட்டிடம்) துறை ரீதியாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க ஒவ்வொரு அறை வழங்குவது வழக்கம்.

அதுபோல் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகளுக்கு அறை வழங்கப்பட்டுள்ளது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு 335, 336, 337, 337 ஏ ஆகிய 4 அறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 337 ஏ அறை கூட்ட அரங்கமாக மாற்ற முடிவு செய்தார். பொதுவாக ஒரு மந்திரிக்கு ஒன்று அல்லது இரண்டு அறைகள் வழங்கப்படுவது வழக்கம்.

புதுப்பிக்கும் பணி

ஆனால் டி.கே.சிவக்குமாருக்கு 4 அறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு அறை கூட்ட அரங்கமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விதானசவுதா கட்டிடத்தின் 3-வது தளத்தில் கூட்ட அரங்குகள் உள்ளன. ஆனால் தனக்கு என தனி கூட்ட அரங்கு வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டதால், 337 ஏ அறை கூட்ட அரங்கமாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

அதுபோல் சில மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை புதுப்பித்து அந்த அறையில் இருந்து அலுவல்களை கவனிக்க தொடங்கிவிட்டனர். மேலும் 2 அறைகள் பெற்ற மந்திரிகள் ஒரு அறையை சீரமைத்து வருகிறார்கள். இதனால் மற்றொரு அறையில் அமர்ந்து அன்றாட அலுவல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன்

ஆனால் கனிமவளம், புவியியல், தோட்டக்கலைத்துறை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் தனக்கு விதானசவுதாவில் ஒதுக்கப்பட்ட அறைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. அதாவது அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நவீன முறையில் அறை உள் அலங்கார வேலைகள், மர வேலைப்பாடுகளுடன் கூடிய மரப்பட்டைகள் பொருத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்கள் ஆகியும் அந்த பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் தனக்கு ஒதுக்கிய அறைக்கு இதுவரை வரவில்லை என்றும், விரைவில் புதுப்பிக்கும் பணி முடிந்ததும் அங்கு சென்று அவர் அலுவல் பணிகளை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

தனியார் ஒப்பந்ததாரர்

இதுபற்றி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனுக்கு விதான சவுதாவில் ஒதுக்கப்பட்ட அறையில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளவில்லை. தனியார் ஒப்பந்ததாரர் மூலம் அங்கு புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. புதுப்பிக்கும் பணி தாமதமாக நடைபெறுவதற்கு காரணம் தெரியவில்லை என்றார்.


Next Story