அதிகளவு தண்ணீர் குடித்ததால் எம்.எல்.ஏ உறவினர் மகன் இறந்தார்
ரேணுகாச்சார்யாவின் அண்ணன் மகன் சந்திரசேகர், அதிகளவு தண்ணீர் குடித்ததால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சிக்கமகளூரு:-
ரேணுகாச்சார்யா அண்ணன் மகன்
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரேணுகாச்சார்யா. இவர் முதல்-மந்திரியின் அரசியல் ஆலோசகராகவும் உள்ளார். இவரது தம்பி மகன் சந்திரசேகர். இவர் ரேணுகாச்சார்யாவுக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி சந்திரசேகர், சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கவுரிகத்தே கிராமத்துக்கு வந்து வினய் குருஜியை சந்தித்து பேசினார். பின்னர் காரில் திரும்பி சென்றார்.
அப்போது ஒன்னாளி அருகே துங்கா கால்வாயில் அவரது கார் பாய்ந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி சந்திரசேகர் உயிரிழந்தார். இதுகுறித்து ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, சந்திரசேகர் கொலை செய்யப்பட்டதாக ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறி வந்தார்.
அதிகளவு தண்ணீர் குடித்ததால்...
இதுதொடர்பாக ஒன்னாளி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சந்திரசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில், சந்திரசேகர் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால், கால்வாய்க்குள் கார் பாய்ந்ததும் சந்திரசேகரால் வெளியே வர முடியாமல், அதிகளவு தண்ணீரை குடித்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் இந்த வழக்கில் 40 பக்க குற்றப்பத்திரிகையும் போலீசார் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், சந்திரசேகர் காரை அதிவேகமாக ஓட்டியதும், இதனால் விபத்து ஏற்பட்டு கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.