மாடால் விருபாக்ஷப்பாவுக்கு மேலும் 10 நாட்கள் போலீஸ் காவல்
லஞ்ச வழக்கு விவகாரத்தில் மாடால் விருபாக்ஷப்பாவுக்கு மேலும் 10 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பெங்களூரு:-
பா.ஜனதா எம்.எல்.ஏ.
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாடால் விருபாக்ஷப்பா. இவர், மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரிய தலைவராகவும் இருந்தார். இவரது மகன் பிரசாந்த். இவர், குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசானயம் சப்ளை செய்வதற்காக டெண்டர் விவகாரத்தில் காண்டிராக்டர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து காண்டிராக்டர் கொடுத்த தகவலின்பேரில் லோக் அயுக்தா போலீசார், பிரசாந்த் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அவர் கையும், களவுமாக பிடிபட்டார்.
ரூ.8 கோடி
இதையடுத்து அவரது வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது. ஒட்டு மொத்தமாக ரூ.8 கோடியே 12 லட்சம் ரொக்கம் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதற்கிடையே மாடால் விருபாக்ஷப்பா தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவருக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. மேலும் லோக் அயுக்தா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியது. இதனால் அவர் லோக் அயுக்தா அலுவலகத்தில் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
இந்த நிலையில் லஞ்சம்பெற்ற வழக்கு தொடர்பான விசாரணையின்போது மாடால் விருபாக்ஷப்பாவுக்கு வழங்கிய முன்ஜாமீன் உத்தரவை ஐகோர்ட் நீதிபதி ரத்து செய்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் கியாத்தசந்திரா சுங்கச்சாவடி அருகே வைத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவை கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுக்க லோக் அயுக்தா முடிவு செய்தது. அதன்படி மாடால் விருபாக்ஷப்பாவை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து 10 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு கோரினர்.
மேலும் 10 நாட்கள்
அப்போது விசாரணைக்கு ஆஜரானபோது மாடால் விருபாக்ஷப்பா ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று போலீசார் கூறினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறுகையில், லஞ்ச வழக்கு தொடர்பாக, மாடால் விருபாக்ஷப்பாவை 5 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து லோக்அயுக்தா விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி ஏப்ரல் 1-ந் தேதி வரை மாடால் விருபாக்ஷப்பாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த நிலையில் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாடால் விருபாக்ஷப்பாவை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் லோக் அயுக்தா போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி, லஞ்ச வழக்குதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, மாடால் விருபாக்ஷப்பாவை மேலும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை வருகிற 11-ந் தேதி வரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவார்கள். எனவே அவர் மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்து செல்லப்படுவார். முன்னதாக மாடால் விருபாக்ஷப்பாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.