மத்திய அரசில் 17 உயர் அதிகாரி பணியிடங்களில் தனியார் துறையினர் நியமனம்


மத்திய அரசில் 17 உயர் அதிகாரி பணியிடங்களில் தனியார் துறையினர் நியமனம்
x

மத்திய அரசில் 17 உயர் அதிகாரி பணியிடங்களில் தனியார் துறையினரை அமர்த்துவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்கிறது.

புதுடெல்லி,

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச்செயலாளர்கள், இயக்குனர்கள், துணைச்செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளில் அகில இந்திய அதிகாரிகளும், 'ஏ' பிரிவு அதிகாரிகளும் நியமிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை ஆகும்.

ஆனால் மத்திய அரசு, இந்த பணியிடங்களில் இபபோது தனியார் துறையின் திறன் வாய்ந்த, நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு நிரப்புவதில் கவனம் செலுத்துகிறது.

முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 10 இணைச்செயலாளர்கள் பணியிடங்கள் இவ்வாறு தனித்துறை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட்டன.

கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசில் இணைச்செயலாளர்கள், இயக்குனர்கள், துணைச்செயலாளர்கள் பணியில் தனியார் துறையினர் 31 பேர் கொண்டு வரப்பட்டனர்..

3-வது முறையாக கடந்த 20-ந் தேதி 20 உயர் பணியிடங்களை தனியார் துறையினரைக் கொண்டு நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது. இதில் 4 இணைச்செயலாளர்கள், 16 இயக்குனர்கள், துணைச்செயலாளர்கள் பணியிடங்கள் அடங்கும்.

அடுத்து 4-வது மறையாக மத்திய சுகாதாரத்துறை, எரிசக்தித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, நிதித்துறை, புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்கல் ஆகிய 6 துறைகளில் 17 உயர் பணியிடங்களில் தனியார் துறை நிபுணர்களை அமர்த்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.

இது தொடர்பான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வரும் 3-ந் தேதி தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு வரும் 3-ந் தேதி முதல் ஜூலை மாதம் 3-ந் தேதி வரை ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது விண்ணப்பங்களில் கூறப்படுகிற தகவல்கள் அடிப்படையில், தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, நேர்முக தேர்வு நடத்தி நியமனம் செய்யப்படும்.

அதன்படி 17 தனியார் துறை நிபுணர்கள் மத்திய அரசில் உயர் அதிகாரிகள் பணியிடங்களை அலங்கரிக்கப்போகிறார்கள். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story