தலைமை பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார் மோடி: வெற்றிகரமாக நிறைவடைந்த ஜி-20 மாநாடு -தலைவர்கள் பாராட்டு
டெல்லியில் 2 நாட்கள் நடந்த ஜி-20 மாநாடு நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
புதுடெல்லி,
சர்வதேச நாடுகளின் கவனம் முழுவதும் கடந்த 2 நாட்களாக இந்திய தலைநகரை நோக்கியே இருந்தது.
ஜி-20 உச்சி மாநாடு
ஏனெனில் உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதற்காக டெல்லி முழுவதும் களைகட்டியிருந்தது.
அமைப்பின் தற்போதைய தலைவரான இந்தியா, 'வாசுதெய்வ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த மாநாட்டை நடத்தியது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
மாநாட்டை நேற்று முன்தினம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி கொரோனா மற்றும் போர்களால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நம்பிக்கை குறைபாட்டை போக்குமாறு சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர் 'ஒரே பூமி' மற்றும் 'ஒரே குடும்பம்' என்ற தலைப்புகளில் நடந்த அமர்வுகளை அவர் தலைமை தாங்கி நடத்தினார்.
இதைத்தொடர்ந்து மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தை அவர் வெளியிட்டார். உக்ரைன் போரால் சர்வதேச நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியபோதும், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது, பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கிய விருந்துடன் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
2-ம் நாள் நிகழ்வுகள்
மாநாட்டின் 2-வது நாளான நேற்று காலையில் உலக தலைவர்கள் அனைவரும் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குவிந்தனர். அங்கு அவர்கள் தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாநாட்டு அரங்கிற்கு திரும்பிய அவர்கள், மாநாட்டின் நினைவாக பாரத் மண்டபத்தில் மரக்கன்று நட்டனர்.
அதைத்தொடர்ந்து 2-ம் நாள் மாநாட்டு நிகழ்வுகள் நடந்தன. இதில் முக்கியமாக 'ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் 3-வது அமர்வு நடந்தது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். அத்துடன் பல்வேறு அம்சங்கள் குறித்த விவாதங்களும் இருந்தன.
இறுதியில் பிரதமர் மோடி நிறைவுரையாற்றினார். அப்போது அவர், மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், மாநாட்டையும் முறைப்படி முடித்து வைத்தார்.
நவம்பரில் மற்றுமொரு அமர்வு
மாநாட்டு நிறைவுரையின்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
ஜி-20 வளர்ச்சிக்காக கடந்த 2 நாட்களில் உங்கள் கருத்துகளை முன்வைத்து, ஆலோசனைகள் வழங்கியதோடு, பல பரிந்துரைகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்த ஆலோசனைகளை எவ்வாறு துரிதப்படுத்தலாம் என்பதை உன்னிப்பாக ஆராய்வது எங்கள் கடமை ஆகும்.
ஜி-20 அமைப்பின் மற்றுமொரு அமர்வை நவம்பர் மாதம் இறுதியில் காணொலி மூலம் நடத்த வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். இந்த மாநாட்டில் ஒப்புக்கொண்ட விஷயங்களை அதில் நாம் மறுஆய்வு செய்யலாம்.
அது குறித்த விவரங்களை எங்கள் குழுவினர் உங்களுக்கு அறிவிப்பார்கள். அதில் நீங்கள் அனைவரும் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன்.
இத்துடன் இந்த ஜி-20 உச்சி மாநாடு நிறைவுபெறுகிறது என்பதை அறிவிக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
அப்போது உலகம் முழுவதும் நம்பிக்கை மற்றும் அமைதிக்கான பிரார்த்தனையாக சமஸ்கிருத சுலோகம் ஒன்றை அவர் மேற்கோள் காட்டினார்.
பிரேசிலிடம் ஒப்படைப்பு
பின்னர் ஜி-20 அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான தலைவர் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வாவிடம் பாரம்பரிய முறைப்படி ஒப்படைத்தார்.
அப்போது பிரதமர் மோடி கூறுகையில், 'ஜி-20 தலைவர் பதவியை பிரேசிலுக்கு இந்தியா வழங்குகிறது. அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அவர்கள் இந்த அமைப்பை வழிநடத்துவார்கள். மேலும் உலகளாவிய ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவார்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது' என நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் மோடியிடம் இருந்து தலைவர் பொறுப்பை பெற்றுக்கொண்ட பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வா, 'மோதலுக்குப்பதிலாக அமைதியும், ஒத்துழைப்புமே நமக்கு தேவை' என தெரிவித்தார்.
பிரிவினையை தூண்டுவதில் ஜி-20 கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை எனக்கூறிய அவர், ஒன்றுபட்ட நடவடிக்கை மூலம் மட்டுமே சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
அதிகாரம் மிக்க இந்த அமைப்பின் தலைவர் பதவியை டிசம்பர் 1-ந்தேதி முதல் பிரேசில் நாடு முறைப்படி அலங்கரிக்கும். அத்துடன் அடுத்த உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் டெல்லி ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளது.
ஜோ பைடன் பாராட்டு
இதற்கிடையே மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'பருவநிலை பிரச்சினைகள், போர் உள்ளிட்டவற்றால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், முக்கிய பிரச்சினைகளுக்கு இன்னும் ஜி-20 அமைப்பால் தீர்வு அளிக்க முடியும் என்று இந்த ஆண்டின் மாநாடு நிரூபித்துள்ளது' என குறிப்பிட்டு இருந்தார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது எக்ஸ் தளத்தில், 'வரலாற்றுப்பூர்வமான ஜி-20 மாநாடு மற்றும் சிறப்பான வரவேற்புக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி. சர்வதேச உணவு பாதுகாப்பு முதல் ஒத்துழைப்புகள் வரை இது ஒரு வெற்றிகரமாக மாநாடாக இருந்தது' என கூறியுள்ளார்.
ரஷியா சார்பில் பங்கேற்ற வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பல வழிகளில் இது ஒரு திருப்புமுனை மாநாடு. இது பல பிரச்சினைகளில் முன்னோக்கிச் செல்ல நமக்கு ஒரு வழியை வழங்குகிறது. ஜி-20 அமைப்பை அரசியலாக்கும் முயற்சிகளை தடுத்ததற்காக இந்தியாவுக்கு நன்றி' என தெரிவித்தார்.
அர்த்தமுள்ள சாதனை
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, 'இந்த ஆண்டு தலைவராக இந்தியாவின் தலைமையின் கீழ், ஜி-20 பிரகடனத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடிந்தது, இது உண்மையிலேயே அர்த்தமுள்ள சாதனையாகும். ஜி-20 மற்றும் ஜி-7 மாநாட்டு முடிவுகளின் அடிப்படையில் பிற தலைவர்களுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்' என ஆவலை வெளிப்படுத்தினார்.
துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, 'மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக தலைமை தாங்கி நடத்தியுள்ள இந்தியாவுக்கு நன்றி. எனக்கும், எனது மனைவி மற்றும் ஒட்டுமொத்த துருக்கி குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளில் சிறப்பான விவாதங்கள் இருந்தன' என்று கூறினார்.
ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் தனது எக்ஸ் தளத்தில், 'இந்தியாவுடனான வலுவான நட்புறவு ஐரோப்பாவுக்கு மிக முக்கியமானது. நமது வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நடவடிக்கையை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.
ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர்
இதற்கிடையே இந்த ஆண்டு புதிதாக ஜி-20 அமைப்பில் இணைக்கப்பட்டு உள்ள ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரான கொமோரஸ் அதிபர் அசாலி அசவுமானி பெரும் மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'ஜி-20 அமைப்பில் எங்களை இணைத்துக்கொள்வது குறித்து விவாதம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் மாநாடு தொடங்கிய உடனேயே எங்களை உறுப்பினராக இணைத்து விட்டனர். அது எனக்கு ஒரு பெரிய உணர்வுப்பூர்வ தருணமாக இருந்தது' என மிகுந்த உணர்ச்சிவசத்துடனே கூறினார்.
இவ்வாறு ஜி-20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.