சட்டசபையை கூட்டுவதற்கான கோப்பில் கவர்னர் கையெழுத்திடவில்லை- மம்தா குற்றச்சாட்டு


சட்டசபையை கூட்டுவதற்கான கோப்பில் கவர்னர் கையெழுத்திடவில்லை- மம்தா குற்றச்சாட்டு
x

சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் கோப்பில் கவர்னர் கையெழுத்திடவில்லை என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வருகிற 24-ந் தேதி முதல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரை தொடங்கி நடத்த திட்டமிட்டுள்ளது.அதற்கு ஒப்புதல் பெறுவதற்கான கோப்பு, கவர்னர் சி.வி.ஆனந்தபோசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதில் கவர்னர் இதுவரை கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, 'நமது கூட்டாட்சி அமைப்பு, முட்டி அழிக்கப்படுகிறது. சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்கான கோப்பில் கவர்னர் இதுவரை கையெழுத்திடவில்லை. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்கும் மத்திய அரசு இதுவரையிலும் அனுமதி அளிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மணிப்பூருக்கு சென்று, அங்கு நிலைமையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறினார்.

இதற்கிடையில், சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பான முக்கியமான கோப்பை குறுகியகால இடைவெளியில் அனுப்பியது ஏன் என்று கவர்னர் ஆனந்தபோஸ் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி சோபன்தேப் சட்டர்ஜியை கவர்னர் அழைத்தார்.

ஆனால் அவர் வெளியூர் சென்றுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் அல்லது உள்துறைச் செயலாளரை தன்னை வந்து சந்திக்கும்படி கவர்னர் கூறியுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழைக்கால கூட்டத்தொடரை தொடங்குவதற்கான கோப்பில் கவர்னர் கையெழுத்திடாததால், கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலை உள்ளது.


Next Story