மோர்பி தொங்கும் பாலம் எங்களது மணிமகுடம்: பாலம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வேண்டும் - உள்ளூர் வாசிகள் கோரிக்கை


மோர்பி தொங்கும் பாலம் எங்களது மணிமகுடம்: பாலம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வேண்டும் - உள்ளூர் வாசிகள் கோரிக்கை
x

உயிர் பலி வாங்கிய தொங்கு பாலம் தங்களது மணிமகுடம் என்றும் அது மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆமதாபாத்,

குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் மோர்பி நகர் அமைந்துள்ளது. 1889-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள மச்சூ நதியின் குறுக்கே, மன்னர் வாக்ஜி தாகோரால் தொங்கு பாலம் கட்டப்பட்டது. 233 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலத்தில், ஐரோப்பிய பாணியில் இப்பாலம் கட்டப்பட்டது. தர்பார்கர் அரண்மனை, லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கும் இந்தப் பாலம் பலமுறை புனரமைக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பாலத்தை 15 ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை மோர்பி மாநகராட்சி நிர்வாகம், ஒரிவா என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கியது. அந்த நிறுவனம் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. கடந்த அக். 26-ம் தேதி, குஜராத் புத்தாண்டு தினத்தில் தொங்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

உயிர் பலி வாங்கிய தொங்கு பாலம் தங்களது மணிமகுடம் என்றும் அது மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

யாருக்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் இங்கு தான் வருவார்கள். குடும்பத்துடன் வெளியே செல்ல வேண்டுமா? செல்பி எடுக்க வேண்டுமா இங்குதான் வருவார்கள். எங்கள நகரின் அடையாளம் இது.. என்கிறார்கள் கவலையோடு.

மோர்பி 1 மற்றும் மோர்பி 2 என்ற எங்களது நகரின் இரண்டு பக்கங்களையும் இந்த பாலம் இணைத்து வந்தது. இது இல்லையென்றால், இரண்டு நகரங்களும் துண்டாகிவிடும். அந்தக் காலத்தில், இந்த மோர்பி பாலம் வழியாக குதிரையில் கூட வீரர்கள் சென்று வந்திருக்கிறார்கள் என்கிறார்கள் மிக மூத்த குடிமக்கள்.

மோர்பி பாலம் எங்களது மணிமகுடம். எங்கள் நகரின் மிகப்பெரிய அடையாளம். வழக்கமாக இங்கு காணப்படும் இந்த தொங்கு பாலம் இல்லாமல், இப்பகுதியைக் கடந்து செல்லவே மனம் கனக்கிறது என்கிறார்கள் அப்பகுதிவாழ் மக்கள்.

நாங்கள் இந்த தொங்கு பாலத்துக்கு 50 காசு கட்டணம் செலுத்தும் நாளில் இருந்தே பாலத்தைக் கடந்து சென்று வருகிறோம். ஆனால் அது இன்று இங்கில்லை.

தொங்கு பாலத்தின் மிச்ச பாகங்களை நீக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இங்கு வசிக்கும் பலருக்கும், தொங்கு பாலம் என்பது தற்போது நினைவாகிப்போயிருக்கிறது. ஆனால், அது மீண்டும் நிஜத்துக்கு வர வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது.


Next Story